ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங்கிரஸுக்கு கமல்ஹாசன் ஆதரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்பேன் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ராகுல் காந்தியின் தேசிய ஒருமைப்பாட்டு பயணத்தில் பங்கேற்ற கமல்ஹாசன், ராகுல் காந்தியுடனும் உரையாடினார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். தானும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களும் காங்கிரசுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என்று குறிப்பிட்ட அவர், அருணாசலத்தை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்.