பயங்கர்வாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..?

தென்மேற்கு பலுசிஸ்தாந் மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் சோதனை சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக வியாழக்கிழமை பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 25 நள்ளிரவு முதல் ஜனவரி 26 அதிகாலை வரை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடுமையான துப்பாக்கி சண்டையின் போது ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் பிடிபட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், எவ்வளவு விலை கொடுத்தேனும் நமது மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை ஒழிக்க இராணுவம் உறுதியாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மகாணத்தில் நீண்ட காலமாக விடுதலை கேட்டு பலுச் போராளி குழுக்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு முன் இந்த பகுதியில் உள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டங்களை குறிவைத்தும் பலுச் போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் பன்னுவின் ஜானிகேலில் உள்ள ராணுவ சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பாகிஸ்தான் இராணுவ வீரர் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து ஜனவரி 5 அன்று கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் இருவரும், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதேபோல் கடந்த மாதம் வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தின் மீர் அலி பகுதியில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து கொல்லப்பட்டவர்களின் தியாகம் வீண் போகாது, பாகிஸ்தானில் முழுமையான அமைதி திரும்பும் என ஜெனரல் பஜ்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.