பலூசிஸ்தானில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் 100 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இரண்டு பாகிஸ்தான் இராணுவ முகாம்களில் பயங்கரவாத அமைப்பான பலுசிஸ்தான் விடுத்லை ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பலூச் விடுதலை இராணுவம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் கூறுகையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த மோதலில் 15 பயங்கரவாதிகளும் 4 பாகிஸ்தான் வீரர்களும் பலியானதாக தெரிவித்தார். மேலும் இன்னும் சண்டை நடந்து கொண்டிருப்பதால் டஜன் கணக்கான பயங்கரவாதிகள் இறந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், நௌஷ்கி மற்றும் பஞ்ச்கூர் பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறியுள்ளார். பயங்கரவாதிகள் இராணுவ முகாம்களுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

இந்த நிலையில் பலூச் விடுதலை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்ச்கூர் மற்றும் நுஷ்கி இராணுவ முகாம்கள் இன்னும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளது. முகாம்களில் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டன.

பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதல் தொடர்பாக செய்திகளை வெளியிட தடை விதித்துள்ளது மற்றும் தொலைதொடர்பை துண்டித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தவறான தகவலை கூறியுள்ளது.

ஆனால் உண்மையில் 100 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பலூச் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக சீனா செல்லவிருந்த சில மணி நேரத்திற்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த மாதம் லாகூரில் உள்ள லோஹாரி கேட் என்ற இடத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுக்கொண்டது. தற்போது பலுசிஸ்தானில் இன்னும் தாக்குதல் நடந்து வருவதால் ஒரு சில நாட்களில் உண்மையான சேத விவரம் வெளிவரும்.

Leave a Reply

Your email address will not be published.