ராஜஸ்தானில் IAF MiG-21 விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு..

வியாழன் கிழமை இரவு ராஜஸ்தானின் பார்மரில் இந்திய விமானப்படையின் MiG-21 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் இரண்டு விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று இரவு 9.10 மணி அளவில் இந்திய விமானப்படையின் MiG-21 பயிற்சி விமானம் பயிற்சி மேற்கொண்ட போது விபத்தில் சிக்கியது. விமானிகளின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதுடன், துயரத்தில் வாடும் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது என விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 இருக்கைகள் கொண்ட MiG-21 பயிற்சி போர் விமானம் நேற்று மாலை ராஜஸ்தானின் பார்மரின் உட்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் போலிசார் கூறுகையில், விபத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு விபத்தின் தாக்கம் இருந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பார்மர் துணை எஸ்பி ஜக்கு ராம் கூறுகையில், இரவு 9.15 மணி அளவில் விபத்து குறித்து உள்ளுர்வாசிகள் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். ஒரு தீ பந்தம் தரையில் விழுந்ததுபோல் இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தார்களா அல்லது ஒரு விமானி இருந்தாரா என கணிக்க முடியாத அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது.

இடிபாடுகள் ஒரு கிலோமீட்டருக்கு மேல் பரவியுள்ளது என ஜக்கு ராம் தெரிவித்துள்ளார். பைட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இஸ்ரமோன் கா தலா என்ற கிராமத்தில் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கிராமம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மத்திய அமைச்சரும் பார்மரின் மக்களவை எம்.பி.யுமான கைலாஷ் சவுத்ரி, விமான விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு இன்று தனது இரு மகன்களை இழந்துள்ளது. தீயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.