பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. 20 பேர் பலி.. பலர் படுகாயம்..
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 300 பேருக்கும் மேல் காயமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலுசிஸ்தான் மகாணத்தின் ஹர்னாய் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அனைவரும் மாவட்ட மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஹர்னாய் மாவட்டத்தை மையமாக கொண்டு 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. ஷாஹரக், ஹெர்னாய் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமாகியுள்ளன.
கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் இராணுவம் வரவழைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹர்னாய் மாவட்டத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹர்னாய் மாவட்டத்தில் உள்ளன அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் துணை மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என அனைவரும் மருத்துவமனைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பொதுமக்களை மீட்கும் பணியில் இராணுவம், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read: காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..