மிசோரமில் 2,500 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்.. மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு..

இந்திய-மியான்மர் எல்லை மாநிலமான மிசோரமில் 2,500 கிலோ வெடிபொருட்கள் மற்றும் 4,500 மீட்டர் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்த ஒரு மியான்மர் நாட்டவர் மற்றும் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாழன் இரவு அன்று ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசாம் ரைபில்ஸ் தலைமையில் 23 செக்டர் அஸ்ஸாம் ரைபிள்ஸின் லுங்கிலி பட்டாலியன் மிசோரம் காவல்துறையுடன் இணைந்து தெற்கு மிசோரமில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சைஹா மாவட்டத்தின் ஜாங்லிங் அருகே ஒரு மினி லாரியை மடக்கி சோதனையிட்டதில் வாகனத்தில் இருந்து 2,500 கிலோ வெடிபொருட்கள், 4,500 மீட்டர் டெட்டனேட்டர், 73,000 இந்திய ரூபாய், 9,35,000 மியான்மர் கரன்சி கியாட் மற்றும் மினி லாரியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஒரு மியான்மர் நாட்டவர் மற்றும் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மியான்மர் நாட்டை சேர்ந்தவர் சங்கிமா(29), மற்ற இருவர் லாலுங்ருவல்புயா(41) மற்றும் லால் த்லெங்லியானா(350) என அடையாளம் காணப்பட்டுள்ளது. சங்கிமா மியான்மரை தளமாக கொண்ட கிளர்ச்சி குழுவான சின் தேசிய இராணுவ (CNA) உறுப்பினர் என கூறப்பட்டுள்ளது.

CNA என்பது மியான்மரில் சுய உரிமை, இன சமத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை வலுயுறுத்தி போராடி வரும் சின் தேசியவாத அரசியல் அமைப்பாகும். அதன் ஆயுத பிரிவுதான் சின் தேசிய இராணுவம் ஆகும். கடந்த ஆண்டு மியான்மரில் நடந்த இராணுவ புரட்சியை அடுத்து சின் மற்றும் சோ சமூகத்தை சேர்ந்த மக்கள் மிசோரமில் தஞ்சமடைந்தனர்.

இந்திய எல்லையில் அமைந்துள்ள மிசோரம் எல்லையில் உள்ள மக்கள் மற்றும் சின் மக்கள் ஒரே மொழி, இனத்ததை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மியான்மர் இராணுவம் சீன ஆதரவுடன் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் CNA கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி வசந்த புரட்சியை அறிவித்தது.

இந்த வசந்த புரட்சியின் நோக்கம் மியான்மரில் இராணுவ ஆட்சியை அகற்றுவதற்கான உள்நாட்டு போரின் துவக்கத்தை குறிப்பதாகும். மியான்மர் இராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றியது. இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மிசோரமில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் இந்தியாவிலிருந்து மியான்மரில் தாக்குதல் நடத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது மியான்மரில் இருந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த கொண்டு வரப்பட்டதா என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.