சவூதியில் 30 பெண் ரயில் ஓட்டுனர் பணியிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பிப்பு..!

சவுதி அரேபியாவில் 30 பெண் ரயில் ஓட்டுனர்கள் பணியிடத்திற்கு 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்பெயினுக்கு சொந்தமான ரயில் நிறுவனமான ரென்ஃபே தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் ரயில்களை இயக்கி வரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனமான ரென்ஃபே ரயில்வே பெண் ஓட்டுனர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது. 30 பணியிடங்களுக்கான விண்ணப்பத்திற்கு 28,000 சவுதி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கல்வி பின்னணி மற்றும் ஆங்கில மொழித் திறன் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மார்ச் நடுபகுதியில் தேர்வு அல்லது தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்கள் ஒரு வருட ஊதிய பயிற்சிக்கு பின்பு மெக்கா மற்றும் மதீனா இடையே புல்லட் ரயில்களை இயக்குவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது சவுதி அரேபியா வணிகத்தில் பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க ஆர்வமாக இருப்பதாக ரென்ஃபே நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் ரயில் ஓட்டுவதற்கு 80 ஆண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும் 50 ஆண்கள் பயிற்சியில் இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. 30 பணியிடங்களுக்கு 20,000 விண்ணப்பங்கள் வந்திருப்பது பெண்களின் ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது.

இருப்பினும் பாலின சமத்துவம் இல்லாததால் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து சவுதி விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் சவுதி பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டு வரை பெண்கள் உணவகங்களுக்குள் நுழையும் போது அவர்கள் தனி நுழைவாயில்களை பயன்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் அவர்களுக்கு தொடர்பில்லாத ஆண்களிடமிருந்து அவர்களை பிரிக்கும் பிளாஸ்டிக் சுவர்களுக்கு பின்னால் உட்கார வேண்டும். சமீப காலம் வரை பாலின விதிகளால் பெண்களுக்கு கற்பித்தல் மற்றும் மருத்துவ உதவி போன்றவற்றில் மட்டுமே வேலை வாய்ப்புகள் இருந்தன.

2017 ஆம் ஆண்டில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதவிக்கு வந்ததில் இருந்துதான் பாலின அடிப்படையிலான விதிகளை தளர்த்தினார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது 2018 ஆம் ஆண்டு பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தில் இருந்து 2020 ல் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதாவது இரண்டே ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் பாலின ஊதிய இடைவெளி ஒரு பிரச்சனையாக உள்ளது. சவுதி ஆண்களுக்கு 37 டாலர் (SR100) சம்பாதிக்கும் நிலையில் அதே வேலைக்கு சவுதி பெண்கள் 21 டாலர்கள் (SR57) மட்டுமே சம்பாதிக்கின்றனர்.

சராசரியாக சவூதி ஆண்கள் ஒரே மாதிரியான கல்வி மற்றும் அனுபவமுள்ள சவூதி பெண்களை விட 43 சதவீதம் அதிகம் சம்பாதிக்கிறார்கள். சவுதி பெண்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சவூதி ஆண்களுடன் ஒப்பிடுகையில் சவூதி பெண்கள் கல்வியில் முன்னேறியுள்ளனர். அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான அல்லது ஆண்களை விட அதிக பணி அனுபவம் உள்ளது. இருப்பினும் அவர்களுக்கு ஆண்களை விட ஊதியம் குறைவாகவே வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.