ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடித்ததில் 33 பேர் உயிரிழப்பு..? எச்சரித்த தாலிபான்..
வடக்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை ISIS-K நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதல்களில் 33 பேர் கொல்லப்பட்டதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ISIS-K அமைப்புக்கு தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு மாகாணமான குண்டுஸில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம், துயரமடைந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக தாலிபான் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
மசூதியில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது அங்கு பையில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. சூஃபிக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இந்த தாக்குதலில் மசூதியின் ஒரு பக்கம் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று. தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு மக்கள் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமானநிலையத்தில் குவிந்த போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் மற்றும் 13 அமெரிக்கப்படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.
வியாழன் அன்று நடந்த 3 குண்டுவெடிப்பில், மஸார் இ ஷெரிப்பில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 58 பேர் காயமடைந்தனர். குண்டூஸ் நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். மூன்றாவது வடக்கு குண்டூசில் தாலிபன் ஆட்சியாளர்கள் பணிபுரியும் இடத்தில் குண்டு வெடித்தலில் 11 பேர் காயமடைந்தனர்.
Also Read: பிரதமர் மோடி ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. CISF வீரர் உயிரிழப்பு..
செவ்வாய் அன்று காபூலின் ஷியாடில் உள்ள ஆண்கள் பள்ளியில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர். ISIS-K சமீபத்திய மாதங்களில் பாகிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மார்ச் மாதம் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இதில் 65க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராகவும் இந்த அமைப்பு தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனையடுத்து மக்கள் தீவிர விழிப்புடன் இருக்குமாறு போலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read: இந்திய விமானப்படைக்கு மேலும் 114 மல்டி ரோல் போர் விமானங்கள்..? உள்நாட்டில் தயாரிக்க முடிவு..
வெள்ளிக்கிழமை வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தில் வெடிக்காத வெடிகுண்டுகளுடன் விளையாடி கொண்டிருந்த போது வெவ்வேறு சம்பவங்களில் 5 குழந்தைகள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் வெடிக்காத வெடிகுண்டை அகற்ற முயன்றபோது மூன்று சகோதரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் 7 வயதுடைய இரண்டு குழந்தைகள் வெடிக்காத வெடிகுண்டுகளுடன் விளையாடி கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக பர்யாப் மாகாண தகவல் மற்றும் கலாச்சார தலைவர் ஷம்சுல்லா முகமதி கூறியுள்ளார்.