ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு 4 நாடுகள் ஆதரவு..

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்த நிரந்தர உறுப்பினர்களில் நான்கு பேர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என வெள்ளிக்கிழமை மக்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகள் எந்த தீர்மானத்தையும் வீட்டோ செய்யலாம். இந்த 5 நிரந்தர உறுப்பினர்களில் சீனா மட்டுமே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் நான்கு பேர், விரிவாக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவிற்கு இருதரப்பு ஆதரவை அதிகாரப்பூர்மாக உறுதிப்படுத்தியுள்ளனர். விரிவாக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது என முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், வெள்ளை மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடி உடனான தனது முதல் இருதரப்பு சந்திப்பின்போது, சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் மற்றும் அணுசக்தி விநியோக குழுவில் நுழைவதற்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களுக்கு நாடு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில், 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது. நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐநா பொது சபையால் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேந்தெடுக்கப்படுகின்றனர்.

தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா, பிரேசில், தென்னாப்ரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.

UNSC சீர்திருத்தங்களின் செயல்முறை தற்போது UN பொதுசபையின் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை (IGN) கட்டமைப்பின் கீழ் விவாதிக்கப்படுகிறது. அங்கு இந்தியா போன்று உறுப்பினர் ஆவதற்கு முயற்சி செய்யும் நாடுகளும் அவசர அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ஐநாவின் IGN செயல்முறையானது பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அமைப்பாகும். இதில் உறுப்பினர்களின் வகைகள், வீட்டோ அதிகாரம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை அடங்கும். ஜி-4 (இந்தியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி) மற்றும் எல்.69 குழுவின் (ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் குறுக்கு பிராந்திய குழு) உறுப்பினர்கள் மூலம் மற்ற சீர்திருத்தம் சார்ந்த நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.