இம்மாத இறுதியில் இந்தியா வரும் மேலும் 4 ரபேல் போர் விமானங்கள்.. மேற்குவங்கத்தில் நிறுத்த முடிவு..

இந்தியா 2016 ஆம் ஆண்டு 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 18 ரபேல் போர் விமானங்கள் வந்துள்ள நிலையில் மே மாத இறுதிக்குள் இந்தியாவில் 24 ரபேல் போர் விமானங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரான்சின் மெரிக்நாக்-போர்டோ விமானதளத்தில் இருந்து இம்மாத இறுதியில் 4 ரபேல் போர் விமானங்கள் வர உள்ளதாக தெரிகிறது. இந்த 4 விமானங்களும் அம்பாலா விமான தளத்தில் தரை இறங்க உள்ளன.

இரண்டு ஸ்குவாட்ரன் விமானப்படை பிரிவை உருவாக்க இந்திய விமானப்படை தயாராக உள்ளது. ஒன்று அம்பாலா விமானத்தளத்தில் 18 ரபேல் போர் விமானங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக மேற்குவங்கத்தின் ஹாஷிமாரா விமான தளத்தில் 18 ரபேல் போர் விமானங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஷிமாராவில் விமானத்தளம் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட ஓடுபாதைகள், வெடிமருந்து கிடங்குகள், பராமரிப்பு மற்றும் பணியாளர்கள் தங்குமிடங்கள் ஆகியவை மறு கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரபேல் போர் விமானத்தில் வானிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஹேமர் ஏவுகணையும் உள்ளது.

மேலும் பிரான்ஸ் உடன் இணைந்து எஞ்சினை உருவாக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரபேல் போர் விமானத்தில் 1000 கிலோ எடையுடைய லேசர் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணைகளும் உள்ளன.

இம்மாத இறுதிக்குள் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும். பயிற்சிக்காக பிரான்சில் 7 ரபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 ரபேல் போர் விமானங்கள் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *