பட்டுக்கோட்டையில் உறவினரை காப்பாற்ற 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினத்தில் உறவினருக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த நஸ்ருதீன்(32) அவரது மனைவி ஷாஹிலா(24), இந்த தம்பதிக்கு ராஜா முகமது என்ற 5 வயதில் ஒரு மகனும், ஹஜாரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இந்த தம்பதியினரின் உறவினரான அசாருதீன்(50) அவரது மனைவி ஷர்மிளா பேகம்(48) ஆகியோர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் நாடு திரும்பி உள்ளனர்.
நாடு திரும்பிய நாள் முதல் அசாருதினுக்கு உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. இதனால் ஷர்மிளா பேகம் புதுக்கோட்டையை சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம் என்பவரை சந்தித்து பரிகாரம் கேட்டுள்ளார். இதற்கு ஒரு ஆடு மற்றும் ஒரு கோழியை பலியிட்டால் உடல் நிலை சரியாகிவிடும் என கூறியுள்ளார்.
அவற்றை பலியிட்டும் உடல்நிலை சரியாகாததால் மீண்டும் முகமது சலீமை சந்தித்துள்ளார் பேகம். அவரது உயிரை காப்பாற்ற ஒரு குழந்தையை பலியிட வேண்டும் என கூறியுள்ளார் மந்திரவாதி. இந்த நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி அன்று ஹாஷிலாவின் 6 மாத குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்து நள்ளிரவில் ஹாஷிலாவின் வீட்டிற்கு சென்று பெண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கி வந்துள்ளார்.
பின்னர் ஹாஷிலாவின் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு குழந்தையை கொன்றுள்ளார். கண்விழித்து பார்த்த ஹாஷிலா குழந்தையை தேட ஆரம்பித்தார். அப்போது வீட்டின் பின்புறம் குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. அதன் பின்னர் குழந்தையை அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கும் படி பேகம் ஹாஷிலாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
Also Read: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..
ஆறு மாத குழந்தை இறந்தது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலிசாருக்கு பட்டுக்கோட்டை தாசில்தார் தங்க முத்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சேதுபாவாசத்திரம் போலிசார் அசாருதீன், ஷர்மிளா பேகம் மற்றும் மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மூவர் மீதும் IPC பிரிவு 201, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.