ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர்கள் தலைமையில் 8 குழு.. பிரதமர் மோடி திட்டம்..
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் 77 அமைச்சர்களை கொண்ட எட்டு குழுக்களை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் அரசு செயல்திறனில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்றதில் இருந்து தனது அமைச்சரவையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது அமைச்சரவையில் உள்ள 77 அமைச்சர்களை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தொழிற்நுட்பங்கள் மற்றும் திறமைசாலிகளை சேர்த்து கொள்வது உட்பட பணியில் வெளிப்படைதன்மை கொண்டு வருவது தொடர்பாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பிரிப்பது தொடர்பாக ஐந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு கூட்டமும் 5 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சகத்தின் செயல்பாடு, தனிப்பட்ட செயல்திறன், கட்சி ஒருங்கிணைப்பு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தந்த அலுவலகங்களின் நல்ல நடைமுறைகளை மற்ற அலுவலகங்களுடன் பகிர்ந்து கொள்வது, அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்கள் பற்றிய விவரங்களை திரட்டுவது, ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் வாய்ந்த 3 இளம் தொழிற்நுட்ப நிபுணர்களை குழுவை அமைப்பது மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பராமரிக்கும் இணைய முகப்பை உருவாக்குவது இந்த அமைச்சர்கள் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு குழுவிலும் 7 அல்லது 8 அமைச்சர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒரு மத்திய அமைச்சர் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இதில் மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, பியூஸ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.