ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.. 8 பேர் காயம்..

நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஸ்ரீநகரின் ஹரி சிங் உயர் தெருவில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகரின் ஹரி சிங் உயர் தெருவில் இன்று மதியம் 3.30 மணி அளவில் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் குண்டு துளைக்காத போலிஸ் வாகனம் மீது அல்ட்ராஸ் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் வாகனத்தின் டயர் பஞ்சரான நிலையில், அருகில் உள்ள மூன்று கடைகள் சேதமாகின. ஊழல் தடுப்பு பணியகத்தின் போலிஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர் உசேன், முகமது ஷபி மற்றும் அவரது மனைவி தன்வீரா மற்றும் மற்றொரு பெண் அஸ்மத் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குடியரசு தின விழா நடைபெறும் இடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் நடந்துள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.