இமாச்சல் பிரதேச முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த காலிஸ்தான் சார்பு சீக்கியர் குழு..

அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு சீக்கியர்கள் குழு (SFJ), இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தன்று காலிஸ்தானியர்கள் சிம்லாவில் காலிஸ்தானி கொடிகளை ஏற்றுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலிஸ்தான் சார்பு சீக்கியர்கள் குழுவின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னுன் ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சுதந்திர பஞ்சாபின் தலைநகராக சிம்லா இருக்கும் எனவும், சீக்கியர்கள் அங்கு காலிஸ்தானி கொடிகளை ஏற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று இமாச்சல் மக்கள் இந்திய தேசிய கொடியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றுவதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை இந்தியாவிற்கும் சீக்கியர்களுக்கும் இடையே உள்ளது. மோடி அரசாங்கம் வன்முறையை பயன்படுத்துவதில் உறுதியாக இருப்பதால் இமாச்சல் மக்கள் இந்த மோதலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26, 2022 அன்று காலிஸ்தான் வாக்கெடுப்பு மூலம் இந்தியாவில் இருந்து பிரிய உள்ளதாக கூறி வரைப்படம் ஒன்றை SFJ வெளியிட்டது. அதில் காலிஸ்தானின் எதிர்கால தலைநகராக சிம்லா இருக்கும் என அறிவிக்கப்பட்டது. SFJ வெளியிட்ட வரைப்படம் 1966 முந்தைய பஞ்சாப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

இதில் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படத்தை SFJ வெளியிட்டு இருந்தது. கடந்த ஆண்டும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக பன்னுன் இதே போன்ற ஒரு அச்சுருத்தலை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து சிம்லாவில் உள்ள சைபர் காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 124 (தேசதுரோகம்), 153-A (நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்), 506 (அச்சுறுத்தல்), 120-B (கிரிமினல் சதி) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.