பாதுகாப்பு துறையில் 351 பொருட்களை இறக்குமதி செய்ய அதிரடி தடை.. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு..
பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை 351 துணை அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் ஆண்டுக்கு 3,000 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்படும். பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவை பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும் கடந்த 16 மாதங்களில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட மூன்றாவது பட்டியல் இதுவாகும்.
ஏற்கனவே சுதேசிமயமாக்கப்பட்ட 2,500 பொருட்களின் பட்டியலையும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லேசர் எச்சரிக்கை சென்சார், உயர் அழுத்த சோதனை வால்வு, உயர் அழுத்த குளோப் வால்வு, உந்து சக்திகள், மின் பாகங்கள், ஏவுகணை கொள்கலன்கள், டார்பிடோ டியூப் லாஞ்சர், துப்பாக்கிச்சூடு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பல்வேறு வகையான கேபிள்கள் போன்ற 351 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 351 உதிரி பாகங்களில் 172 துணை அமைப்புகள் மற்றும் உதிரி பாகங்கள் டிசம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 89 பொருட்கள் டிசம்பர் 2023 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி செய்ய தடைவிகிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 பொருட்கள் பொருட்கள் டிசம்பர் 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பொருட்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்கப்படும். முதல் பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. அதில் போக்குவரத்து விமானங்கள், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிகப்பல்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் சோனார் சிஸ்டம்கள் போன்ற 101 ஆயுதங்கள் மற்றும் இராணுவ தடவாளங்கள் 2024 ஆம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது பட்டியல் மே மாதம் வெளியிடப்பட்டது. அதில் 108 இராணுவ ஆயுதங்கள், அடுத்த தலைமுறை கொர்வெட்டுகள், வான்வழி முன்னறிவிப்பு அமைப்புகள், டேங்க் எஞ்சின்கள் மற்றும் ரேடார் போன்ற அமைப்புகளுக்கு இறக்குமதி செய்ய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது 351 உதிரி பாகங்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read: அடுத்த ஆண்டு தனது முதல் வெளிநாட்டு பயணமாக UAE செல்கிறார் பிரதமர் மோடி..?
ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். சுயசார்பு இந்தியாவை நோக்கி இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,000 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி சேமிக்கப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வகையில் கடந்த ஆண்டு மே மாதம் பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் நான்கு தசாப்தங்களுக்கு பழமையான ஆயுத தொழிற்சாலை வாரியத்தை கலைத்து, 41 ஆயுத தொழிற்சாலைகளை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் கீழ் ஏழு நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஏழு நிறுவனங்களும் வெடிமருந்துகள், கனரக ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வன்பொருட்களை தயாரிக்கிறது.
இந்தியல் உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு படைகள் சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத கொள்முதலில் செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டாலர் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ஆகும்.
Also Read: Z ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள CRPF பெண் கமாண்டோக்கள்..
பாதுகாப்பு அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 35,000 கோடி மதிப்பில் இராணுவ வன்பொருளை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதனால் இறக்குமதியை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.