குஜராத்தில் 1,66,000 கோடியை முதலீடு செய்ய உள்ள ஆர்சிலர் மிட்டல் நிறுவனம்..
ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா (AMNS India) நிறுவனம் மாநிலத்தில் 6 வெவ்வேறு திட்டங்களில் 1,66,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக குஜராத் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதற்கான் ஒப்பந்தம் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா மற்றும் AMNS India நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திலீப் உம்மன் கையெழுத்திட்டதாக குஜராத் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி, AMNS India நிறுவனமானது ஹசிராவில் உள்ள கேப்டிவ் ஜெட்டி விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு 4,200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் சூரத்தின் சுவாலியில் உள்ள கிரீன் ஸ்டீல் ஆலையை விரிவுபடுத்த 30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரத்தின் கிடியாபெட்டில் உள்ள சூரத் ஸ்டீல் சிட்டி மற்றும் தொழிற்துறை கிளஸ்டரை மேம்படுத்த 30,000 கோடியும், ஹசிரா ஆலையின் எஃகு உற்பத்தி திறனை 8.6 MMTPA யில் இருந்து 18 MMTPA யாக உயர்த்த 45,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாநிலம் முழுவதும் 10 ஜிகாவாட் சுத்தமான எரிசக்தியை உற்பத்தி செய்யும் திறம் கொண்ட சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கலப்பின மின் உற்பத்தி வசதிகளை மேம்படுத்த 40,000 கோடி ரூபாயும், ஹசிராவில் டவுன்ஸ்ட்ரீம் கோக் ஓவன் திட்டத்திற்காக 17,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாவ்நகர் மாவட்டத்தின் கானா தலாவ் பகுதியில் 2,200 மெகாவாட் திறன் கொண்ட புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆலை அமைப்பதற்கான திட்டமும் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமாக இந்த 6 திட்டங்களில் AMNS India நிறுவனம் 1,66,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட 1.80 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.