ஜம்மு காஷ்மீரில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. விமானி ஒருவர் உயிரிழப்பு..

இந்திய இராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் இன்று மதியம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸின் பராப் பகுதியில் விபத்தில் சிக்கியதில் துணை விமானி உயிரிழந்த நிலையில் தலைமை விமானி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குரேஸ் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக குரேஸ் பந்திபூர் சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஹெலிகாப்டர் சேவை மட்டுமே உள்ளது. இந்த நிலையில் குரேஸ் பகுதியில் உடல்நிலை சரியில்லாத வீரரை மீட்பதற்காக இராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்தின் உடனான தொடர்பை இழந்தது. இதனை அடுத்த நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைவுகள் வடக்கு காஷ்மீரின் பந்திபோராவில் உள்ள குஜ்ரான் நல்லா பகுதியில் பனிமூட்டத்திற்கு இடையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த விமானி மற்றும் துணை விமானி இருவரையும் மீட்டு உடனடியாக உதம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் துணை விமானி மேஜர் சங்கல்ப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த தலைமை விமானி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

29 வயதான மேஜர் யாதவ் ஜெய்பூரில் தந்தையுடன் வசித்து வந்தார். 2015 ல் பந்திபோராவில் நியமிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.