இரண்டாவது S-400 ஏவுகணை அமைப்பை சீன எல்லையில் நிலைநிறுத்த உள்ள இராணுவம்..?

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சீனா உடனான வடக்கு எல்லைகளில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட தொடங்கும் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் இரண்டாவது S-400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கான விநியோகம் ரஷ்யாவில் தொடங்கியுள்ளது. இருநாட்டு எல்லையில் 10 கிலோமீட்டர் இடைவெளியில் எந்த போர் விமானமும் பறக்க கூடாது என்ற விதிகளை மீறி சமீப காலமாக சீனா தனது போர் விமானங்களை எல்லைக்கு அருகே அடிக்கடி பறக்கின்றன.

இந்த நிலையில் S-400 ஏவுகணை அமைப்பை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான வேலைகள் ரஷ்யாவில் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட முதல் S-400 ஏவுகணை அமைப்பு வடமேற்கு இந்தியாவில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள ஹோடான், காஷ்கர், கர்குன்சா மற்றும் ஷிகாட்சே போன்ற அனைத்து முக்கிய விமான தளங்களையும் சீனா மேம்படுத்தியுள்ளது. மேலும் நீட்டிக்கப்பட்ட ஓடுபாதைகள், தங்குமிடங்கள், கூடுதல் போர்விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் உளவு விமானங்களுக்கான எரிபொருள் சேமிப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது.

இந்தியாவால் நடத்தப்படும் வான்வழி தாக்குதல்களை சமாளிக்க இரண்டு S-400 வான்வழி ஏவுகணை அமைப்புகள் மற்றும் பல விமான எதிர்ப்பு அமைப்புகளையும் சீனா நிறுவியுள்ளது. ரஷ்யாவில் இருந்து இரண்டாவது S-400 ஏவுகணை அமைப்பு இந்தியா வர உள்ள நிலையில், அமெரிக்காவின் CAATSA தடையில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா கூடுதலாக 48 MI-17 V5 மீடியம் லிஃப்ட் ஹெலிகாப்டர்களுக்கான நீண்டகால ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது மற்றும் 21 MiG-29 மற்றும் 12 Su-30MKI போர் விமானங்களை வாங்குவதையும் ஒத்தி வைத்துள்ளது. CAATSA சட்டம் இயற்றபடுவதற்கு முன்பே இந்தியா ரஷ்யா உடன் மேற்கொண்ட S-400 ஏவுகணை அமைப்பை வாங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளை எதிர்கொள்ள அவசர தேசிய பாதுகாப்பு தேவை என இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்கியதற்காக சீனா மற்றும் துருக்கி மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. 40,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட S-400 ஏவுகணையின் அனைத்து அமைப்பும் 2023 இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு படைபிரிவிலும் தலா 128 ஏவுகணைகள் கொண்ட இரண்டு ஏவுகணை பேட்டரிகள் உள்ளன. இந்த ஏவுகணைகள் 120, 200, 250 மற்றும் 380 கிலோமீட்டர் இடைமறிப்பு வரம்புகளை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.