மாலத்தீவில் இந்தியா சார்பாக நடந்த யோகா நிகழ்ச்சியில் தாக்குதல்.. 19 பேரை கைது செய்த போலிசார்..
மாலத்தீவின் மாலே நகரில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் யோகா தின நிகழ்வின் போது தாக்குதல் நடத்தியவர்களை போலிசார் தேடி வரும் நிலையில், இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு செவ்வாய் கிழமை மாலத்தீவின் மாலே நகரில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சி இந்திய கலாச்சார மையம் மற்றும் மாலத்தீவு விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சி செவ்வாய் கிழமை காலை 6.30 மணி அளவில் தொடங்கியது. இதில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மஹாவர், மாலத்தீவு அரசாங்கத்தை சேர்ந்த தூதர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து கலோலு தேசிய மைதானத்தில் யோகா செய்து கொண்டிருந்தபோது பலர் வளாகத்தினுள் நுழைந்து தாக்க ஆரம்பித்தனர்.
மைதானத்திற்குள் நுழைந்த குழுவினர் ஷஹாதாவின் வசனங்கள் அடங்கிய கொடிகளை ஏந்தி, பங்கேற்பாளர்களை மிரட்டி, தாக்கி அங்கு உள்ள சொத்துக்களை சேதப்படுத்தினர். ஒரு சில போலிசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் கலவரத்தை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டது. யோகா இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என கலவரக்காரர்கள் தெரிவித்து மற்றவர்களை தாக்க ஆரம்பித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்த இளைஞர் அமைச்சர் அஹமட் மஹ்லூப், மதத்தின் பெயரால் அரசியல் காரணங்களுக்காக நிகழ்ச்சி தடைப்பட்டதாக தெரிவித்தார். 2014 ஆண்டு முதல் மாலத்தீவில் யோகா தினம் நடைபெற்று வருவதாகவும், யோகா ஒரு மத நடவடிக்கை அல்ல எனவும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும் மாலத்தீவின் முற்போக்கு கட்சி மற்றும் ஜம்இய்யத் சலாஃப் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மஹ்லூப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த யோகா நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டு புதன்கிழமை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வியாழன் கிழமை மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 7 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 60 நாட்கள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை போலிசார் வெளியிட்டுள்ளனர். சமீப காலமாக சீன ஆதரவாளர்கள் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து மாலத்தீவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.