பாக். இராணுவத்தில் முதன்முறையாக லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்ட இந்து அதிகாரிகள்..
பாகிஸ்தானில் முதன்முறையாக சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி கேலாஷ் குமார் மற்றும் அனில் குமார் ஆகிய இருவரும் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்து சமுகத்தை சேர்ந்தவர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
குமார் இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் முதல் இந்து மேஜர் ஆனார். பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தில் நியமிக்கப்பட்டார். குமார் சிந்து மாகாணத்தின் தர்பார்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் மற்றும் அனில் குமார் பதின் மாவட்டத்தை சேர்ந்தவர். ஜாம்ஷோரோவில் உள்ள லியாகத் மருத்துவ சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் MBBS முடித்த பிறகு பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவ படைக்கு கேப்டனாக சேர்ந்தார்.
பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரகால மருத்துவ பணி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து அதிகாரியும் குமார் தான். பாகிஸ்தானின் தொலைத்தூர பகுதியான தர்பார்கர், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஹன்சா பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.
அங்கு பொதுமக்களுக்கும் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் உதவி செய்துள்ளார். உலகின் மிக உயரமான 22,000 அடி உயரத்தில் கே2-க்கு அருகிலுள்ள பால்டோரோ செக்டாரில் 36 நாட்கள் தங்கி பணியாற்றியதற்காக அவருக்கு தமாகா-இ-டஃபா பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியதற்காக அவருக்கு தம்கா-இ-பக்கா மற்றும் தம்கா-இ-ஆசம் ஆகிய பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குமார் அல்-மீசான் இராணுவ நடவடிக்கையிலும் பணியாற்றியுள்ளார். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்வாட்டில் நடந்த ராஹ்-இ-நிஜாத் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளார்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, பதவி உயர்வுக்காக குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிதாக பதவி உயர்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் எங்கள் பெருமை என அழைத்தார். பருவநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் சர்தாஜ் குல் வசீர், இது நாட்டிற்கு பெருமையான தருணம் என கூறினார்.
எழுத்தாளர் ஷாமா ஜூனேஜோ கூறுகையில், வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் அதிகாரி ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படுவதை காண்பீர்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு ட்விட்டர்வாசிகளும் லெப்டினன்ட் கர்னலாக கைலாஷ் குமால் பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.