சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச பெண்ணை அதிரடியாக கைது செய்த பெங்களூர் காவல்துறை..

பெங்களுரில் 15 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேச பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கர்நாடகா காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட வங்கதேச பெண் ரோனி பேகம் (27) தனது 12 வயதில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளார். ரோனி பேகம் என்ற தனது இஸ்லாமிய பெயரை பயல் கோஷ் என்று இந்து பெயராக மாற்றியுள்ளார்.

பின்னர் தான் ஒரு பெங்காலி என கூறி மும்பையில் உள்ள டான்ஸ் பாரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மங்களூரை சேர்ந்த டெலிவரி எக்சிகியூட்டிவ் நிதின் குமாரை 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் உள்ள அஞ்சனாநகர் பகுதியில் குடியேறியுள்ளார்.

அங்கு ரோனி பேகம் தையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் மும்பையில் இருந்தபோது பான் கார்டை பெற்றுள்ளனர். பின்னர் நிதின் பெங்களூரில் உள்ள தனது நண்பரின் உதவியுடன் ஆதார் கார்டை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ரோனி 2020 ஆம் ஆண்டு தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக வங்கதேசம் செல்ல முடிவு செய்துள்ளார். கொல்கத்தா சென்று அங்கிருந்து டாக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் குடியேற்ற அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட் ஆவணத்தில் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து ரோனியை கைது செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஆனால் அதிகாரிகள் அப்போது ரோனியை கைது செய்யவில்லை. பின்னர் ரோனி பெங்களூர் திரும்பினார். இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பாஸ்போர்ட் போலி என்பதும், அவர் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் ரோனி பற்றிய தகவல்கள் பெங்களூர் போலிஸ் கமிஷனருக்கு FRRO அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து பைதரஹள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து தம்பதிகள் வேலை பார்த்த இடம் மற்றும் அவர்கள் வசித்த இடங்களில் விசாரணை நடத்தி உள்ளனர். பின்னர் 3 மாத கண்காணிப்புக்கு பிறகு ரோனியை கைது செய்துள்ளதாக போலிசார் இன்று தெரிவித்தனர். நிதின் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி வருகின்றனர். மேலும் அடையான அட்டை பெற உதவியவர்களையும் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக டிசிபி சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.