உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. பாஜக வாக்குகளை பிரிக்கும் சமாஜ்வாதி..
அடுத்த ஆண்டு உத்திரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முந்தைய கருத்து கணிப்பை ஏபிபி-சி வோட்டர் வெளியிட்டுள்ளது. இது தேர்தலுக்கு முந்தைய மூன்றாவது கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துகணிப்பின் படி, உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 212 முதல் 224 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 151 முதல் 163 இடங்களையும், முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 12 முதல் 24 இடங்களையும், காங்கிரஸ் 2 முதல் 10 இடங்களை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இது நேரடியாக அகிலேஷ் யாதவ் கட்சிக்கு செல்லும் என கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத கருத்துகணிப்பின் படி பாஜக 241 முதல் 249 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டது. நவம்பர் மாத கருத்துகணிப்பில் 213 முதல் 221 இடங்களும், டிசம்பர் மாத கருத்துகணிப்பின் படி 212 முதல் 224 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2017 அம் ஆண்டு தேர்தலில் பாஜக 41.4 சதவீத ஓட்டு வங்கியுடன் 325 இடங்களை வென்றிருந்தது.
டிசம்பர் மாத கருத்துகணிப்பின்படி பாஜக 40.4 சதவீத வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 33.6 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 13.2 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 7.3 சதவீத வாக்குகளையும் பெறும் என ஏபிபி- சி வோட்டர் கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read: உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக.. புதிய கருத்துகணிப்பில் தகவல்..
பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹோல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் பாஜகவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நேரடியாக சமாஜ்வாதி கட்சிக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் பிரியும் வாக்குகள் பாஜகவுக்கே சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.