308 வார்டுகளில் வெற்றி.. தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக..

தற்போது நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் என்ன் மொத்தமாக 308 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்களை அதிமுகவிடம் பாஜக கேட்டுள்ளது. ஆனால் 10 சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்குவதாக அதிமுக கூறியதால் தனித்து போட்டியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முடிவுகள் வெளியான நிலையில் பாஜக 230 பேருராட்சி வார்டுகள், 56 நகராட்சி வார்டுகள் மற்றும் 22 மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக தனித்து போட்டியிட்டால் தோல்வி அடையும் என கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் பாஜக 11 மாநகராட்சிகளில் தடம் பதித்துள்ளது. கன்னியாகுமரி மாநகராட்சியில் 11 வார்டுகளும், திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டுகளும், சென்னை, தஞ்சாவூர், கடலூர், காஞ்சிபுரம், ஓசூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி மற்றும் வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் தலா 1 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது.

இதில் சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 5,539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா 3,503 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக பாஜக சென்னையில் கால் பதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவினால் தான் ஆட்சியை இழந்தோம் என அதிமுக கூறிவந்த நிலையில், சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

பிரச்சாரத்தின் போது குழந்தை பெற்ற ரேவதி தென்காசி மாவட்ட கடைய நல்லூர் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவின் இந்த வெற்றியை அடுத்து நேற்று காலை முதல் இரவு வரை ‘நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என்ற ஹாஷ்டேக் முதலிடத்தை பிடித்தது. சில இடங்களில் திமுகவை பாஜக பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளது.

மேலும் பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்கள் பாஜகவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பாஜக உடன் பயணிக்க தொடங்கிவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியே இதனை எடுத்துகாட்டுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் இந்த வெற்றியை தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.