5 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்ட பிரம்மோஸ் இலக்கு.. 2023ல் பிரம்மோஸ் NG சோதனை..!

பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியில் பிரதமர் நரேந்திரமோடி நிர்ணயித்த இலக்கை அடைய போதுமான திறனை கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவர் அதுல் டி ரானே கூறுகையில், பிரதமர் நரேந்திரமோடி 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் பாதுகாப்பு ஏற்றுமதி இலக்கை அடைய நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கட்டத்திற்குள் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் மட்டுமே அந்த இலக்கை அடைய முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் பிப்ரவரியில் பிலிப்பைன்ஸுக்கு சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் 3 பேட்டரிகளை 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிலிப்பைன்ஸ் வாங்குகிறது.

பிரமோஸின் ஒரு பேட்டரி என்பது இரண்டு ஏவுகணைகள், ஒரு ரேடார் மற்றும் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் பயிற்சிக்காக பிலிப்பைன்ஸ் அதன் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தற்போது பிரம்மோஸ் 2 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது.

பிலிப்பைன்ஸிடம் இருந்து அதிக ஆர்டர்களை பெறுவோம் என ரானே தெரிவித்துள்ளார். மேலும் வியட்நாம், மலேசியா மற்றும் பல நாடுகளுடன் ஏற்றுமதிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என ரானே தெரிவித்துள்ளார். 2023 மற்றும் 2034 ஆம் ஆண்டிற்குள் பிரம்மோஸ் அடுத்த தலைமுறை ஏவுகணை சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

டிஃபென்ஸ் எக்ஸ்போ 2022 தொடக்க விழாவில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா 8,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் 35,000 கோடி என்ற ஏற்றுமதி இலக்கை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை 30,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.