தற்காலிக தங்குமிடங்களை அமைத்து வரும் கனடா போராட்டகாரர்கள்.. அதிர்ச்சியில் ஜஸ்டீன் ட்ரூடோ..
கனடாவில் ட்ரக் டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கூறியதால் அவருக்கு எதிராக ஆயிரகணக்கான ட்ரக் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டகாரர்கள் தற்காலிக தங்கும் இடங்களை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா அமெரிக்காவுடன் தனது எல்லையை பகிர்ந்துள்ளதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சாலை வழியாகவே நடைபெறுகிறது. இந்தநிலையில் ஜனவரி 15, 2022 அன்று கனடா எல்லைக்குள் நுழையும் ட்ரக் ஓட்டுநர்கள் தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் 14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என கனடா அரசாங்கம் அறிவித்தது.
இதனால் கோபமடைந்த ட்ரக் டிரைவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று 2700 டிரக்குகளுடன் சுமார் 50,000 பேர் வான்கூவரில் இருந்து ஒட்டாவிற்குள் நுழைந்தனர். போராட்டகாரர்கள் பிரதமரின் இல்லத்தையும் முற்றுகையிட்டதால் ஜஸ்டீன் ட்ரூடோ தனது குடும்பத்துடன் இல்லத்தை விட்டு வெளியேறி ரகசிய இடத்திற்கு சென்றார்.
கனடா நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பெரிய சாலையை மறித்து அனைத்து பக்கங்களிலும் ட்ராக்டர் குவிக்கப்பட்டது. கனடா எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் போராட்டம் கனடா முழுவதும் பரவி வருகிறது. இந்த போராட்டத்தை போராட்டகாரர்கள் சுதந்திர கான்வாய் என அழைக்கிறார்கள்.
இந்த நிலையில் சிட்டி ஹால் அருகில் உள்ள கான்ஃபெடரேஷன் பூங்காவில் போராட்டகாரர்கள் தற்காலிக தங்கும் இடங்களை அமைத்து வருவதாக உள்ளுர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூங்காவை சுற்றிலும் ட்ராக்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர சமையலுக்கு தேவையான சிலிண்டர்கள், டீசல் எரிபொருள் தொட்டிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டத்தை எதிர்த்து விவசாய அமைப்புகள் நவம்பர் மாதம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. தற்காலிக தங்குமிடம் அமைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த போராட்டம் சுமார் 378 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று பிரதமர் மோடி மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அப்போது இந்திய விவசாய அமைப்புகள் நடத்திய போராட்டம் தொடர்பாக இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ருடோ, விவசாய போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது ஒரு அமைதியான போராட்டம் என்றும், அதே நேரத்தில் மனித உரிமை பிரச்சனை என்றும் கூறினார்.
தற்போது கனடாவில் நடைபெற்று வரும் போராட்டத்தால் ஜஸ்டீன் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இது அராஜகக் கூறுகளின் தொகுப்பு என அழைத்த ட்ரூடோ, கவலைப்படாத சிறுபான்மையினர் என போராட்டம் நடத்தும் ட்ரக்கர்களை அழைத்தார். அடுத்த நாட்டில் போராட்டம் நடந்தால் ஆதரவு, சொந்த நாட்டில் நடந்தால் தலைமறைவு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.