இலங்கை துறைமுகத்திற்கு வரும் சீன உளவு கப்பல்.. எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு..
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சீனாவின் உளவு கப்பல் ஒன்று அடுத்த மாதம் இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகமான ஹம்பந்தோட்டா துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும், ஆகஸ்டு 11 அன்று இலங்கை வந்து சேரும் என ரெபினிடிவ் ஐகான் கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஆலோசனை நிறுவனமான பெல்ட் அண்ட் ரோட் இன்ஷியேட்டிவ் ஶ்ரீலங்கா சீன கப்பல் இலங்கை வருவதை உறுதி படுத்தியுள்ளது.
நிறுவனம் தனது இணையதளத்தில், சீன அறிவியல் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5, ஆகஸ்ட் 11 அன்று அம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வரஉள்ளது. பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு ஆகஸ்ட் 17 அன்று புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவான் வாங் 5 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு ஆகியவற்றை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சீன கப்பலில் இருந்து 750 கிலோமீட்டர் பரப்பளவில் உளவு பார்க்க முடியும். அதன் பரப்பளவுக்குள் தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட அணு மின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களையும், முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
மேலும் இந்திய விண்வெளி நிலையமான ஶ்ரீஹரிகோட்டாவையும் உளவு பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் எந்தவொரு முன்னேற்றங்களையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பில் உள்ள இந்திய தூதர் திங்கள் கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிடம் அதிக கடன் வாங்கியுள்ள இலங்கை கடனை அடைக்க முடியாததால், ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கியுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பா செல்லும் முக்கிய கப்பல் பாதைக்கு அருகில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த துறைமுகம் சீன இராணுவ தளமாக மாறக்கூடும் என அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றன. சீன கப்பலின் இந்த பயணம் தொடர்பாக இந்தியாவின் ரா உளவு அமைப்பு உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.