அதிக மக்கள்தொகையால் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக வாய்ப்பு..?

ஐ.நா சபையின் மக்கள் தொகை நிபுணர் ஒருவர், இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறுவது பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான உரிமையை வலுப்படுத்தக்கூடும் என கூறியுள்ளார்.

ஐநாவின் மக்கள் தொகை பிரிவு இயக்குநர் ஜான் வில்மோத் திங்களன்று, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாவது, சில விஷயங்களில் உரிமைகோரல்களுக்கு வழிவகுக்கும் என கூறினார். உலக மக்கள் தொகை வாய்ப்புகள் அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 1.429 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சீனாவின் மக்கள் தொகை 1.426 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை மாற்றம் பற்றி குறிப்பிட்ட ஜான் வில்மோத், முன்பு கணித்ததை விட 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்கள் தொகையில் மாற்றம் நிகழும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறினால் ஐ.நாவில் உள்ள பங்கு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர ஐந்து உறுப்பினர்களின் பங்கு பற்றிய விவாதத்தின் அடிப்படையில் என்ன நடக்கும் என நான் ஆச்சரியபடுகிறேன். அவர்கள் எப்படியும் அந்த குழுவில் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும் என கூறி வருகிறார்கள். உங்களுக்கு தெரியும், அது அவர்களின் கூற்றை மேலும் வலுப்படுத்த கூடும் என கூறியுள்ளார்.

சீனா தனது மக்கள் தொகை கணக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு நடத்தியது. அதேநேரம் கொரோனா தொற்று காரணமாக இந்தியா 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. முந்தைய அறிக்கைகள்படி, 2027 ஆம் ஆண்டு இந்தியா மக்கள் தொகையில் சீனாவை முந்திவிடும் என கணிக்கப்பட்டு இருந்தது.

தற்போது சீனா மக்கள் தொகை பற்றிய கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளதால், இந்திய அடுத்த ஆண்டே சீனாவை பின்னுக்கு தள்ளும் என கூறப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியா பற்றி குறிப்பிட்ட ஜான் வில்மோத், 1970 மற்றும் 1980 களில் மிக கடுமையான முறையில் சீனா மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது.

இதனால் சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி மிக வேகமாக குறைந்தது. இருப்பினும் தற்போது சீனா அதிக வயதுடையோர் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. மறுபுறம் இந்தியா மென்மையான மாற்றத்தை கொண்டிருந்தது. இது கருவுறுதல் விகிதத்தை மெதுவாக குறைத்தது. இருப்பினும் முதுமையும் அங்கு வரும், இது படிப்படியான செயல்முறையாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் அனைத்து உத்தரவுகளை இந்தியா மீறியுள்ளதாகவும், எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை நிரந்தர உறுப்பினராக அனுமதிக்க கூடாது என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.