சீனாவுக்கு தடை.. இந்தியாவுக்கு அனுமதி.. இலங்கைக்கு கண்டனம் தெரிவித்த சீனா..

இலங்கை சீன உர இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. சீன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக இலங்கை கூறியுள்ளது. இலங்கையின் இந்த முடிவு சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை சமீபத்தில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக கரிம உரங்களை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு இலங்கையில் உணவு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சீனாவின் குயிங்டாயோ சிவின் பயோடெக் குருப் நிறுவனத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் 96,000 டன் மற்றும் 3,000 டன் கரிம உரங்கள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை இலங்கையின் வேளாண் துறையினர் சோதனை செய்த போது அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் சீனாவின் மற்றொரு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை ஆய்வு செய்தபோதும் அதிலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருந்ததால் சீனா உடனான 63 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இலங்கை நிறுத்தியது.

இதனால் இலங்கையில் உரத்தட்டுப்பாடு நிலவியதால் இந்தியாவிடம் இருந்து நானோ நைட்ரஜன் திரவ உரங்களை இறக்குமதி செய்ய உள்ளது. இந்தியாவிடம் இருந்து 3.1 மில்லியன் லிட்டர் நானோ திரவ உரங்களை இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்த உரங்களை ஆய்வு செய்ததில் எவ்வித தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையின் கொழும்புவில் உள்ள சீன தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தான் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்தோம் என சீன தூதருக்கு இலங்கை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றால் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. மேலும் இலங்கையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதால் இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிரான தளமாக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: இலங்கை அதிபர் ராஜபக்சே

மே-19 அன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தில் 25 டன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிவந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. சரியான நேரத்தில் இந்தியா அந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியது. இதனை அடுத்து இந்தியாவுடன் மீண்டும் உறவை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே புதுபிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

Also Read: விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் சென்னையில் கைது.. NIA அதிரடி..

இதனை அடுத்துதான் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் முனையத்தை உருவாக்க இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இது இலங்கை துறைமுகத்திலேயே மிகப்பெரிய ஒப்பந்தம் என கூறப்பட்டது. மேலும் இந்தியாவின் வெளிநாட்டு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா இந்தியா இலங்கை இடையேயான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் அதிகாரத்தில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான மித்ர சக்தி போர் பயிற்சியின் போது இந்திய இராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவனே இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்தை நடத்தினார்.

Also Read: சீனாவுடன் எல்லையில் பதற்றம்.. இலங்கையுடன் போர் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய இராணுவம்..

Leave a Reply

Your email address will not be published.