ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் ரஷ்ய கொடியை ஒளிரவிட்டதாக போலி செய்தி வெளியிட்ட சீனா..

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியா டெல்லியில் உள்ள முக்கியமான கட்டிடத்தில் ரஷ்யாவின் கொடியை ஏற்றி உள்ளதாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் போலியான செய்தியை பதிவிட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவை கண்டித்து பல நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுடனும் இந்தியா நட்புறவை பகிர்ந்து கொள்கிறது.

இந்த போரில் எந்த நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச்சபை வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்க்க முன்வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் குளோபல் டைம்ஸ் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியா, ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்ய கொடியை ஒளிரவிட்டுள்ளதாக கூறியுள்ளது. பின்னர் அந்த பதிவை குளோபல் டைம்ஸ் நீக்கிவிட்டது.

இந்த புகைப்படமானது, பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP) இன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5-7 ஆம் தேதி கொண்டாடப்படும் ஜன் ஔஷதி திவாஸின் நான்காவது ஆண்டை குறிக்கும் வகையில் குதுப் மினார் மீது ஒளிரச்செய்யப்பட்டது. குளோபல் டைம்ஸ் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்களில் “பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா” என தெளிவாக உள்ளது.

பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா திட்டமானது மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும். அதாவது மக்கள் மருந்தகத்தை போற்றும் விதமாக டெல்லியில் உள்ள குதுப் மினார் மீது ஒளிரவிடப்பட்டது.

மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவான PIB FactCheck, குதுப் மினாரில் ரஷ்ய கொடி ஒளிரவிடப்பட்டதாக குளோபல் டைம்ஸ் கூறியதை மறுத்துள்ளது. அது ரஷ்ய கொடி இல்லை என்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா கீழ் கொண்டாடப்பட்ட நிகழ்வு என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.