சீனா 38,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.. அமைச்சர் தகவல்..

சீனா கடந்த ஆறு தசாப்தங்களாக லடாக் யூனியன் பிரதேசத்தில் சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலபரப்பை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

சீனாவால் கட்டப்படும் பாலம் குறித்த கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன், லடாக்கில் சீனாவால் கட்டப்படும் சட்டவிரோத பாலம் குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பாலம் 1962 முதல் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்து கட்டப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் கடந்த ஆறு தசாப்தங்களாக லடாக் யூனியன் பிரதேசத்தில் சுமார் 30,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலபரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாக முரளிதரன் எம்.பிக்களின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

கடந்த 1963 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இருந்து சீனாவுக்கு 5,180 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை வழங்கியதாக முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும் 1963 ஆம் ஆண்டு சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதை இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை எனவும், அது சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை என்றும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளுக்கு பலமுறை தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் மோதல் பற்றி குறிப்பிட்ட முரளீதரன், இந்தியாவும் சீனாவும் எஞ்சிய பகுதிகளில் படைகளை விலக்குவதற்காக இராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகளில் எங்களின் மூன்று முக்கிய கொள்கைகள் வழிநடத்தப்படும்.

அவை, இருதரப்பினரும் LAC-யை கண்டிப்பாக மதிக்க வேண்டும் மற்றும் கடைபிடிக்க வேண்டும். இருதரப்பும் ஒருதலைபட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சிக்க கூடாது. இருதரப்புக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.