கடற்படை வலிமையை அதிகரித்து வரும் சீனா.. மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு அனுமதி அளிக்குமா பாதுகாப்பு அமைச்சகம்..?
இந்திய கடற்படைக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் கட்டுவது தொடர்பாக இந்திய கடற்படை தனது அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது. இந்திய கடற்படையின் இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் இந்த முறை அனுமதி வழங்கும் என இந்திய கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏனெனில் இந்திய கடற்படை கடந்த நான்கு ஆண்டுகளாக மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான தேவையை கூறி அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அதற்கான செலவு அதிகமாக இருப்பதாலும், அதனை கட்டிமுடிக்க பல வருடங்கள் பிடிக்கும் என்பதாலும் அதனை நிராகரித்து வந்தது.
இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறுகையில், மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு பதில் நீர்மூழ்கி கப்பலில் அதிக கவனம் செலுத்தலாம் என கூறினார். ஆனால் இந்திய கடற்படை மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் இந்திய கடற்படைக்கு நிச்சயம் தேவை என கூறுகிறது.
மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் 65,000 டன் அளவிற்கு கட்டமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதிக செலவாகும் என்பதால் பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்த நிலையில் தற்போது அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது விமானந்தாங்கி கப்பலில் போர் விமானங்கள் மட்டும் இல்லாமல் ஆளில்லா ட்ரோன்களையும் நிறுத்தும் வகையில் வடிவமைத்து சமர்பித்துள்ளது.
தற்போது சீனா அதன் கடற்படையை அதிகரித்து கொண்டே வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை சீனா வைத்துள்ளது. சீனா தரைப்படையை விட கடற்படையில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்திய கடற்படையில் ரஷ்யாவின் வடிவமைப்பான INS விக்ரமாதித்யா செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது விமானந்தாங்கி கப்பலான INS விக்ராந்த் தற்போது சோதனையை முடித்துள்ள நிலையில் அடுத்த வருடம் கடற்படையில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.
Also Read: இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தில் ஹம்மர் ஏவுகணை.. சீன எல்லையில் நிலைநிறுத்த முடிவு..
ஆனால் சீனா ஏற்கனவே இரண்டு விமானந்தாங்கி கப்பலை இயக்கி வருகிறது. மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இதுத்தவிர இன்னும் மூன்று விமானந்தாங்கி கப்பலை கட்டமைக்கும் ஆரம்ப கட்டத்தில் சீனா உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சினாவிடம் 5 விமானந்தாங்கி கப்பல் செயல்பாட்டில் இருக்கும் என கூறப்படுகிறது.
Also Read: துபாய் ஏர் ஷோ 2021.. வானில் பறந்த இந்தியாவின் தேஜஸ்.. பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்..
இந்த நிலையில் இந்திய கடற்படை இரண்டு விமானந்தாங்கி கப்பலை மட்டும் வைத்து சீனாவை எதிர்க்க முடியாது என கருதுகிறது. ஒரு விமானந்தாங்கி கப்பல் கிழக்கிலும், மற்றொன்று தெற்கிலும் மூன்றாவது கப்பலை பராமரிப்பின் கீழ் வைக்கவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.