இங்கிலாந்தின் இராணுவ விமானிகளை ஆட்சேர்ப்பு செய்யும் சீனா.. எச்சரித்த இங்கிலாந்து..!

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையில் உள்ள விமானிகளுக்கு பயிற்சி அளிக்க முன்னாள் இங்கிலாந்து ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானிகளை சீனா பணியமர்த்தி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு திட்டங்களை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு திட்டம் இங்கிலாந்து சட்டங்களை மீறவில்லை என்றாலும், இதனை தடுப்பதற்கு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் (MoD) தெரிவித்துள்ளது.

தற்போது பணியுரியும் விமானிகள் மற்றும் முன்னாள் விமானிகள் அனைவரும் இரகசிய சட்டத்திற்கு உட்பட்டவர்கள். புதிய தேசிய பாதுகாப்பு மசோதா பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூடுதல் திருத்தங்களை மேற்கொள்ளும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீன விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்து விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வது இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பல ஆண்டுகளாக கவலையாக உள்ளது. ஆட்சேர்ப்பு செய்யப்படும் விமானிகளுக்கு 2,70,000 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் இராணுவ விமானிகள் பணியமர்த்தப்படுவதாக 2019 ஆம் ஆண்டு சில வழக்குகள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு சென்றது. பின்னர் கோவிட் காரணமாக ஆட்சேர்ப்பு தாமதமான நிலையில் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இங்கிலாந்து விமானிகள் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் டைபூன்ஸ், ஜாகுவார்ஸ், ஹாரியர்ஸ் மற்றும் டொர்னாடோஸ் போன்ற ஜெட் விமானங்களை இயக்கியவர்கள். அவர்கள் சமீபத்திய லாக்ஹீட் மார்ட்டின் F-15 போர் விமானங்களை இயக்கியவர்கள் கிடையாது.

ஆனால் சீனா F-15 போர் விமானங்களை இயக்கியவர்களை பணியில் அமர்த்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தகவலின்படி, 30 முன்னாள் ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானிகள் சீனாவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை உடனடியாக பணிகளை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சம் எச்சரித்துள்ளது.

உளவு சட்டங்களுக்கு எதிரான பயிற்சி நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து விமானிகளை தவிர பல மேற்கத்திய நாட்டு விமானிகளையும் சீனா பணியில் அமர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.