ஈரான் வழியாக மியான்மர் இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா.. இந்தியாவிற்கு நெருக்கடி..

மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சீனா மியான்மர் இராணுவத்திற்கு ஈரான் மூலம் உதவி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் மலாக்கா ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீனா முயற்சித்து வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மர் இராணுவம் ஆட்சி கவிழ்பில் ஈடுபட்டு அதிகாரத்தை கைப்பற்றி மியான்மரில் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் Flightradar 24 நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி 13 அன்று ஈரானிய தூது குழு ஒன்று மியான்மருக்கு சென்றுள்ளது.

இதனை அடுத்து ஜனவரி 20 ஆம் தேதி ஈரானிய சரக்கு விமான நிறுவனமான Qeshm Fars Air நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று மியான்மருக்கு சென்றுள்ளது. பின்னர் அடுத்த நாள் விமானம் ஈரானுக்கு திரும்பியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாலும் ஈராக், சிரியா மற்றும் ஏமனில் உள்ள போராளி குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி வருவதாலும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதன் மூலம் ஈரான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அதேநேரம் அமெரிக்காவின் எதிரி நாடான சீனா ஈரானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெறுவதால் இராணுவ ஆட்சியை எந்த நாடும் ஆதரிக்கவில்லை. சில மியான்மர் இராணுவத்தினர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சாங் சூகி மியான்மர் இராணுவத்தால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பல நாடுகள் இராணுவ ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

இதனால் மியான்மர் மீது சர்வதேச ஆயுத தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது. இந்த நிலையில் சீனா நேரடியாக இல்லாமல் ஈரான் மூலம் மியான்மர் இராணுவத்திற்கு ஆயுதம், வெடிபொருட்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளதால் மியான்மர் பிரச்சனையில் புதிதாக தடை விதித்தாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மலாக்கா ஜலசந்தியை கைப்பற்றுவதன் மூலம் இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு எதிராக கால் பதிக்க சீனா முயல்கிறது. இதுத்தவிர தன்னுடைய சரக்குகளை மியான்மர் கடல் மற்றும் தரை வழியாக எளிதாக கொண்டு செல்லவும், மியான்மரில் உள்ள அரிய கனிமங்களை கைப்பற்றவும் திட்டமிட்டு மியான்மரில் சீனா ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.