6,600 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த சீனாவின் VIVO மற்றும் OPPO.. வருவாய் இயக்குனரகம் நோட்டீஸ்..

விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2,217 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டறிந்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) தெரிவித்துள்ளது.

வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Vivo மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது சீனாவின் விவோ கம்யூனிகேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த விவோ இந்தியா மொபைல் உற்பத்தி, அசெம்பிள், பாகங்கள் விநியோகம் மற்றும் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது.

விவோ இந்தியாவின் ஆலைகளில் வருவாய் புலனாய்வு இயக்குனரம் மேற்கொண்ட சோதனையில், செல்போன்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நிறுவனத்தால் பெறப்பட்ட சில உதிரி பாகங்களின் விவரக்குறிப்புகளில் வேண்டுமென்றே தவறான அறிவிப்பை குறிப்பிட்டுள்ளதை இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.

இந்த தவறான அறிக்கையின் மூலம் விவோ இந்தியா 2,217 கோடி ரூபாய்க்கு சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. விசாரணை முடிவடைந்த நிலையில், 1962 சுங்க சட்டத்தின் விதிமுறைகளின்படி, 2,217 கோடி சுங்க வரி தொடர்பாக விளக்கம் கேட்டு விவோ இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவோ இந்தியா தாமாக முன்வந்து 60 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. இதேபோல் சமீபத்தில் ஒப்போ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய சோதனையில், அந்நிறுவனம் 4,403 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

வரி ஏய்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு ஓப்போ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விவோ மற்றும் ஓப்போ இரண்டு நிறுவனமும் சீனாவின் BBK எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. ஓப்போவில் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி என இரண்டு துணை நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.