இந்தியாவில் சிப் உற்பத்தி.. வேதாந்தா உடன் இணைகிறது தைவானின் ஃபாக்ஸ்கான்..
தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ளது இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக கூட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் காட்சி சுற்றுச்சூழல் (Display Ecosystem) அமைப்பை மேம்படுத்துவதற்காக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 76,000 கோடி ஊக்கத்தொகை திட்டத்தை(PLI) அறிவித்த பிறகு, வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்திக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கூட்டு நிறுவனத்தில் வேதாந்தா பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும். அதாவது வேதாந்தா நிறுவனம் 60 சதவீத பங்குகளையும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் 40 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும்.
இந்த கூட்டு நிறுவனத்தை அமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் 118.7 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது. வேதாந்தா நிறுவனம் 60,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டு நிறுவனத்தின் தலைவராக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் இருப்பார். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு இது குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.
ஆலையை அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்ய ஒரு சில மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தைவானுக்கு வெளியே ஆலைகளை நிறுவ அல்லது கூட்டு சேர்ந்து செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்ய முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு யோகியோ கார்ப்ரேஷன் நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டக்டர்களை உருவாக்கி வருகிறது. செமிகண்டக்டர்களை தவிர ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாக சப்ளையராகவும் இருந்து வருகிறது. இதுதவிர தற்போது எலக்ட்ரானிக் கார்கள் உற்பத்தியிலும் முக்கிய இடத்தை பிடிக்க அந்த துறையில் ஃபாக்ஸ்கான் உற்பத்தியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.