இந்தியாவிற்கு மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்.. ரஷ்ய எண்ணெய் நிறுவனம் அறிவிப்பு..

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதார தடையால் ரஷ்யாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனம் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிற்கு கச்சா விலையில் 25-27 சதவீதம் தள்ளுபடியை வழங்குகின்றன.

ரஷ்ய அரசு நடத்தும் ரோஸ் நேப்ட் நிறுவனம் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். ரஷ்ய நிறுவனங்கன் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்கினாலும் பணம் எவ்வாறு செலுத்தப்படும் என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் SWIFT பரிவர்த்தனையை பயன்படுத்துவதில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்ய பிரதமர் புதின் இந்தியா வந்தபோது, 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நோவோரோசிஸ்க் துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு 2 மில்லியன் டன் எண்ணெய் வழங்குவதற்கான எண்ணெய் ஒப்பந்தத்தில் ரோஸ் நேபிட் மற்றும் இந்தியா ஆயில் கார்ப்பரேஷன் கையெழுத்திட்டன.

ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் 90 டாலரில் இருந்து 115 டாலராக உயர்ந்துள்ளது. மேற்குநாடுகள் SWIFT தடை விதித்துள்ளதால் இந்திய வங்கிகள் ரஷ்யாவிற்கு பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளன. இதற்கான மாற்று வழியை இந்திய ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது.

இந்தியா கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை இறக்குமதி தான் செய்கிறது. அந்த 80 சதவிதத்தில் 70 சதவீதம் OPEC நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி குறைவாகவே உள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு நாளைக்கு 4.2 மில்லியன் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது.

எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியா விலை உயர்ந்தால் கடுமையாக பாதிப்படையும். மேலும் போர் தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 185 டாலராக உயரும் என ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் அது உக்ரைனை தாக்க நிதி உதவி செய்தது போல் ஆகிவிடும் எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.