DefExpo2022: 53 ஆப்ரிக்க நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இந்தியா வருகை..?

இந்தியாவின் பாதுகாப்பு கண்காட்சியான DefExpo2022, அக்டோபர் 18 அன்று குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியா-ஆப்ரிக்கா பாதுகாப்பு உரையாடலின் (IADD) கீழ் ஆப்ரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் மெகா கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த பிப்ரவரி 6 2020 அன்று DefExpo உடன் இணைந்து உத்திரபிரதேசத்தின் லக்னோவில் முதல் இந்தியா-ஆப்ரிக்கா பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது. தற்போது குஜராத்தில் இரண்டாவது சந்திப்பு நடைபெற உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவிற்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கும் இடையேயான இராணுவ மற்றும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்த 53 ஆப்ரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-ஆப்ரிக்கா பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்க 13 ஆப்ரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்தியா வர உள்ளனர்.

இந்த 13 நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளின் துணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வர உள்ளனர். அங்கோலா, ருவாண்டா, எத்தியோப்பியா, மொசாம்பிக், மத்திய ஆப்ரிக்க குடியரசு, மொரிட்டானியா, மடகாஸ்கர், போட்ஸ்வானா, காம்பியா, கானா, கபோ வெர்டே, சாவோ டோம் & பிரின்சிப் மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்டிகின்றனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ், இந்தியா பல ஆப்ரிக்க நாடுகளில் டிஃபென்ஸ் அகாடமிகள் மற்றும் கல்லூரிகள் அமைப்பது மற்றும் பயிற்சி குழுக்களை அனுப்புவது போன்றவற்றை மேற்கொள்ள உள்ளது. ஆப்ரிக்காவின் நுழைவு வாயிலான எகிப்து இந்தியாவின் தேஜாஸ் போர் விமானத்தில் ஆர்வம் கொண்டுள்ளது.

ஆப்ரிக்க கண்டத்திற்கான தேஜஸ் போர் விமானங்களை பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றம் மாற்றியமைப்பதற்கான (MRO) மையத்தை எகிப்தில் இந்தியா அமைக்க உள்ளது. இந்த இந்தியா-ஆப்ரிக்கா பாதுகாப்பு உரையாடலில், திறன் மேம்பாடு, இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்றவை ஆராயப்பட உள்ளன.

இந்த DefExpo2022 பாதுகாப்பு கண்காட்சியில் DRDO தனது 430 தயாரிப்புகளை காட்சிக்கு வைக்க உள்ளது. இந்த DefExpo2022 பாதுகாப்பு கண்காட்சி அரங்கம் 1 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. மேலும் இதில் பெரிய அளவிலான ட்ரோன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளாக பல சர்வதேச ஆர்டர்களை இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் பெற்று வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடையவும், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையான 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடையவும் இந்த DefExpo2022 முக்கிய நிகழ்வாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.