கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த DRDO.. மத்திய அரசு ஒப்புதல்..

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான கொரோனா மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தொட்டுள்ளது. மேலும் தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா முதல் அலையை சமாளித்த இந்தியா இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் ஊரடங்கு அறிவித்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியும் அனுமதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த மாத இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு பல உலக நாடுகள் ரெம்டெசிவர், ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டல் ஆகியவற்றை வழங்கி உதவி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான DRDO கரைத்து குடிக்கும் வகையிலான பவுடர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இதற்கு டி ஆக்சி டி குளுகோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து DRDO கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதல் கட்ட சோதனை கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதன்பின் இரண்டாம் கட்ட சோதனையும் முடிவடைந்து தற்போது மூன்றாம் மற்றும் இறுதி கட்ட சோதனை நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.

110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் கொரோனா நோயாளிகள் வேகமாக குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் அனுமதி வழங்கிய நிலையில் இந்த மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *