இலங்கையில் பொருளாதார நெருக்கடி.. 40,000 மெ.டன் எரிபொருள் அனுப்பி வைத்த இந்தியா..?
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா செவ்வாய்கிழமை 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்கியுள்ளது. இவை ஸ்வர்ண புஷ்பா என்ற எண்ணெய் கப்பல் மூலம் இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டது. இலங்கை சீனாவின் கடன் வலையில் சிக்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதிக கடன் காரணமாக இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலாவணி குறைந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் அந்நிய செலாவணி குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தால் மின்வெட்டு, எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பதிலாக அதற்கு ஈடான தேயிலையை ஏற்றுமதி செய்து கடனை அடைத்து வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு கையிருப்பு இல்லாததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்கியுள்ளது.
செவ்வாய் அன்று இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய் கம்மனபில மற்றும் இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோர் கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய் கப்பலை வரவேற்றனர். இலங்கையில் எரிசக்தி இருப்பை உறுதி செய்யும் வகையில் இந்தியா-இலங்கை நாடுகள் இணைந்து பணியாற்றும் என இந்திய தூதர் தெரிவித்தார்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்ட நிலையில் அதனை சமாளிக்கும் வகையில் உணவு பொருட்கள் இறக்குமதிக்காக இலங்கைக்கு ஜனவரி மாதம் 900 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை அறிவித்தது. இதுதவிர இந்த மாத தொடக்கத்தில் எரிபொருள் தேவைக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இந்தியா அறிவித்தது. இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்தியா வர உள்ள நிலையில் இந்த எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.