முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா வீட்டில் FBI அதிகாரிகள் சோதனை..

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான இடங்களில் FBI சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புளோரிடாவில் உள்ள தனது இல்லம் FBI அதிகாரிகளால் சோதனையிடப்படுவதாக திங்கள் அன்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் மீடியாவில், புளோரிடாவில் பாம் பீச்சில் உள்ளது தனது அழகான வீடு மார்-ஏ- லாகோவில் தற்போது FBI அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டு வருகிறது. இது குற்றவியல் தவறான நடத்தை, நீதி அமைப்பை ஆயுதமாக்கல் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட விரும்பாத தீவிர இடது ஜனநாயக கட்சியினரின் தாக்குதல் என ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல்கள் உடைந்த மூன்றாம் நாடுகளில் மட்டுமே நடக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனிடம் தோல்வி அடைந்தார். அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது சில கோப்புகளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அமெரிக்க சட்டத்தின்படி ஜனாதிபதியின் கடமைகளுடன் தொடர்புடைய மெமோக்கள், கடிதங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல்களை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அந்த கோப்புகளை புளோரிடா வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ட்ரம்ப் ஜனவரி 6 அன்று கேபிட்டல் மீது நடந்த தாக்குதல் மற்றும் தேர்தலை கவிழ்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட சில கோப்புகளை அழிக்க முயற்சிப்பதாக ஜோ பிடன் கட்சியை சேர்ந்த நபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்ரம்பின் புளோரிடா வீட்டில் இருந்து 15 பெட்டி ஆவணங்கள் மீட்கப்பட்டதாக தேசிய ஆவணக் காப்பகம் பிப்ரவரியில் கூறியது. ட்ரம்பின் நடைமுறைகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என ஆவணக்காப்பகம் அப்போது கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க நீதித்துறை ஜனவரி 6 தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

பிப்ரவரியில் ஆவணக்காப்பாளர் டேவிட் ஃபெரிரோ, அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடம், 2021 ஆம் ஆண்டு முழுவதும் 15 ஆவண பெட்டிகளை திரும்ப பெறுவது குறித்து தேசிய ஆவண காப்பகம் மற்றும் பதிவு நிர்வாகம் டிரம்புடன் தொடர்பு கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் ட்ரம்ப் ஜனவரி 2022 ல அவற்றை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது ட்ரம்ப் வீட்டில் FBI சோதனை நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.