சுற்றுலாவை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்.. சர்வதேச சுற்றுலா அட்டவணையை வெளியிட்ட IRCTC..
கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சுற்றுலா துறையை ஊக்கப்படுத்தும் விதமாக இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கார்ப்ரேஷன், கோர்டெலியா குருஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் சொகுசு கப்பல் சுற்றுலா போக்குவரத்தை தொடங்க உள்ளன.
இந்த சுற்றுலாவில் முக்கிய இடமாக மும்பை, கோவா, டியூ, கொச்சி, லட்ச தீவு, சென்னை, கொழும்பு, திரிகோணமலை ஆகியவை அடங்கும். கோர்டெலியா குருஸ் மற்றும் IRCTC நிறுவனங்களின் இந்த கப்பல் சொகுசு மற்றும் ஆடம்பர கப்பல் ஆகும்.
இந்த ஆடம்பர கப்பலில் உணவகங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், திறந்த வெளி சினிமா தியேட்டர், பார் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து புறப்படும் இந்த கப்பல் டியூ, கோவா, கொச்சி, லட்சத்தீவு சென்று மீண்டும் மும்பை திரும்புகிறது.
இரண்டாவது கட்டமாக சென்னையில் இருந்து புறப்படும் இந்த கப்பல் கொழும்பு, காலி, திரிகோணமலை, சென்னை என நிறைவடையும். இந்த சுற்றுலாவிற்காக IRCTC வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் ஆடம்பர மற்றும் சொகுசு சுற்றுலா பயணம் ஆகும்.
இந்தியாவின் கலாச்சார சுற்றுலாவாக இது அமையும். தற்போது இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போதைக்கு சிறிய தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பயணிகளின் வரவேற்பை பொருத்து சுற்றுலா கப்பல் திட்டமிடப்பட்ட நேரத்தில் இயக்கப்படும் என IRCTC தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் பல சுற்றுலா கப்பல்கள் இருந்தாலும் அவை இந்தியாவிற்கு உள்ளேயே சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும். ஆனால் IRCTC அறிமுகப்படுத்தியுள்ள இந்த சுற்றுலா சர்வதேச சுற்றுலாவாக அமையும். பயணிகள் புதுபுது அனுபவத்தை பெற முடியும்.