காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் JeM கமாண்டர் உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..?

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவின் நைரா மற்றும் புத்காவில் நடந்த இரட்டை என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுத்தள்ளினர்.

நேற்று மாலை தெற்கு காஷ்மீரின் புல்வாமாவின் நைரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டர் ஜாஹித் மன்சூர் வானி மற்றும் வாஹிட் அகமது ரிஷி உட்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அந்த இடத்தில் இருந்து ஏகே 56 துப்பாக்கி, ஆயுதங்கள் மற்றம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சரார்-இ-ஷரீஃப் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

ஜெய்ஷ்-இ-முகமது கமாண்டர் ஜாஹித் வானி கொல்லப்பட்டது மிகப்பெரிய வெற்றி என காஷ்மிர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். இவன் 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி 40க்கும் மேற்பட்ட CRPF உயிரிழந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் என கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் மட்டும் 11 என்கவுண்டர்களில் 8 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உட்பட 21 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர 9 தீவிரவாதிகள் உயிருடன் மற்றும் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 17 நபர்களையும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று நடந்த தாக்குதலுக்கு முன்னதாக தெற்கு காஷ்மீரின் ஹசன்போரா பிஜ்பேராவில் 53 வயதான தலைமை காவலர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பேராவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே தலைமை காவலர் அலி முகமது கனி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தயதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே முகமது அலி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published.