இலங்கையில் உணவு அவசரநிலை.. ரசாயன உரங்களுக்கு தடை..

இலங்கையில் இராசாயன உரங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இரசாயன உரங்களுக்கு பதிலாக கரிம உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசாயன உரங்களை இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் தடைவிதிப்பதால் செலவீனம் அதிகமாகி உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளன.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ரசாயன உரங்களை விடுத்து கரிம உரங்களுக்கு மாற வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார். பசுமையான இலங்கை என்ற திட்டத்தின் கீழ் இரசாயன உரங்களை முழுவதுமாக குறைத்துவிட்டு இயற்கை உரங்களுக்கு மாற உத்தரவிட்டார். மேலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யவும் தடை விதித்தார்.

பெரும்பாலும் விவசாயிகள் இரசாயன உரங்களையே தனது பயிர்களுக்கு இட்டு வருகின்றனர். இரசாயன உரம் விலை குறைவாகவும் கையாள்வதற்கு எளிமையாகவும் இருப்பதால் செலவு குறைந்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் கரிம உரத்தினால் விலை அதிகரித்து உற்பத்தி செலவும் அதிகரிப்பதால் தங்களுக்கு லாபம் கிடைக்காது என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த தடையினால் அரிசி, வெற்றிலை, ரப்பர், உருளைகிழங்கு, லவங்கம், பட்டை உள்ளிட்ட பல பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சி அடையும். வெற்றிலை விவசாயிகள் இந்த தடைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாயில் வெற்றிலையின் பங்கு 10 சதவீதம் ஆகும். தற்போது ரசாயன உரத்தின் தடையால் வெற்றிலை உற்பத்தி பாதியாக குறைய வாய்ப்பு இருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ரப்பர் உற்பத்தியும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரப்பர் விவசாயத்தில் ஒரு வித பூஞ்சை நோய் ரப்பர் இலைகளை தாக்கும், அதுபோன்ற நேரங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மட்டுமே ரப்பர் மரங்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது இலங்கையில் ஊரடங்கு செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊரடங்கால் விவசாயம் வளர்ச்சி இல்லை, சுற்றுலா வருவாயும் இல்லை, அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கையின் ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பும் குறைந்து வருகிறது. ஒரு இக்கட்டான நிலையில் இலங்கை உள்ள நிலையில் ரசாயன உரங்களுக்கு தடை என்பது பொருளாதாரத்தை மேலும் மோசமடையவே செய்யும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தவறான பொருளாதார கொள்கையே இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. ரசாயன உரத்தினால் கல்லீரல் பாதிப்பு வரும் என அதிபரிடம் சிலர் தவறான தகவலை பரப்பியதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றன. ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் ரசாயன உரத்தடை என்பது மேலும் விழ்ச்சி அடைய காரணமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published.