சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் உடன் இணைந்து நீர்மூழ்கி கப்பலை உருவாக்க உள்ள பிரான்ஸ்..?

தென்சீனக்கடலில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் சொந்தமாக நீர்மூழ்கிகப்பலை உருவாக்க முயற்சித்து வரும் நிலையில் அதற்கு பிரான்ஸ் உதவும் என அந்நாட்டு ஆயுதப்படை தளபதி கூறியுள்ளார்.

பிரான்ஸ் ஆயுத படைகளின் கூட்டு தளபதி ரியர் அட்மிரல் ஜீன் மாத்தியூ ரே, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், பிலிப்பைன்ஸ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். பிரான்ஸ் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கும் நீண்டகால பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

நாங்கள் 1973 முதல் நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் நீர்மூழ்கி கப்பல் படையை நிறுவுவதில் பிலிப்பைன்ஸ்க்கு உதவ தயாராக உள்ளோம் என கூறினார். இருப்பினும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

மேற்கு பிலிப்பைன்ஸில் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் தயாராக உள்ளோம். பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சி அல்லது கடல் ரோந்து பணிகளை நடத்த தயாராக இருப்பதாக ரே கூறினார். ஆனால் ரோந்து பணிகள் எங்கே எப்போது என குறிப்பிடவில்லை.

பிரான்ஸ் கூட்டுப்படை தளபதி மார்ச் 8 முதல் 11 வரை பிலிப்பைன்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த வருகையின் போது பிரான்ஸின் கண்காணிப்பு போர்கப்பலான வென்டிமியரே (F734) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கூட்டு ரோந்து பணிகளை மேற்கொள்ள தடை விதித்து இருந்தார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரோட்ரிகோ பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் கூட்டு ரோந்து பணிகளை மேற்கொள்ள பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது சீனாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.