அனல் பறக்கும் கோவா தேர்தல்.. கோவா மாநில பொறுப்பாளரை நியமித்தது திரிணாமுல் கட்சி..

கோவா உட்பட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததை அடுத்து புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் உள்ளார். தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உதவினார். இந்த நிலையில் கோவாவிலும் கால்பதிப்பதற்காக கோவாவிலும் பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் மம்தா பானர்ஜி. இவரது ஆலோசனை படி கோவாவில் திரிணாமுல் கட்சியில் நகர்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் திரிணாமுல் கட்சியின் லோக்சபா எம்பி மஹூவா மொய்த்ராவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது. இதனை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிசேக் பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கோவாவில் பாஜக அரசிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாஜக ஆட்சியின் கீழ் கோவாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளதாகவும். வேலை இல்லாதோர் பட்டியலில் கோவா எட்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவாவில் ஒரு சாதாரண மனிதன் வீடு வாங்க முடியாத நிலைமை உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கோவா, பஞ்சாப், உத்திர பிரதேசம், உத்ராகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவே ஆட்சியை பிடிக்கும் என ஏபிபி, சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கோவாவில் பாஜகவிற்கு 37 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 23.6 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்கு 18.6 சதவீதமும் ஆதரவு உள்ளது. அடுத்த இடத்தில் தான் திரிணாமுல் கட்சி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.