கொரோனாவை கட்டுப்படுத்த 2 வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடகா அரசு அறிவிப்பு..?

கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் கர்நாடகாவில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் இரண்டு வார காலத்திற்கு முழுமையான ஊரடங்கை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 40,000 தாண்டி உள்ளது. இதனை கட்டுப்படுத்த கர்நாடக அரசு மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 ஆம் தேதி வரை இரண்டு வார காலத்திற்கு முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளது இருப்பினும் சிலவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மளிகை கடை, காய்கறி மற்றும் பழக்கடை ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி. திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இறுதி சடங்குகளில் 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவு. மேலும் திட்டமிடப்பட்ட விமானங்கள் மற்றும் இரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு.

பார்கள், விடுதிகள், வணிக வளாகங்கள் மூடப்படுகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. திரையரங்குகள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

அனைத்து மத வழிப்பாட்டு தளங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *