உணவு பற்றாக்குறை.. அவசரகால நிலையை பிறப்பித்தது இலங்கை அரசு..!

உணவு பற்றாக்குறை காரணமாக இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. தற்போது இலங்கையின் அந்நிய செலாவாணி குறைந்து வருவதால் இறக்குமதியும் குறைந்து வருகிறது.

இதனை சமாளிக்க இலங்கை அரசு அவசரகால நிலையை பிறப்பித்துள்ளது. அதன் படி அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை பிறப்பித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோருக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக இலங்கையில் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், உருளைகிழங்கு, வெங்காயம், பால் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். விலை உயர்வின் காரணமாக கோத்தபய அரசுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு அந்நிய செலாவணியின் செலவை குறைக்கும் வகையில் எண்ணெய், மஞ்சள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. கடந்த ஆண்டு அந்த நாட்டின் பொருளாதாரம் 4 சதவீதத்திற்கும் கீழ் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் வாகனத்திற்கான எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனையும் மீறி மக்கள் அலட்சியமாக நடந்து கொண்டால் எரிபொருளை ரேசனில் வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றும் பரவி வருவதால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. மேலும் டாலருக்கு எதிரான இலங்கையின் ரூபாய் மதிப்பும் 20 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. இலங்கை ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக இலங்கையின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

சீனா மற்றும் உலக வங்கியிடமும் இலங்கை கடன் வாங்கியுள்ளதால் அதற்கும் வட்டி கட்ட வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா துறையும் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானமின்றி தவித்து வருகிறது இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.