அமெரிக்காவை அச்சுருத்தும் ஹவானா சிண்ட்ரோம்.. அறிக்கை தாக்கல் செய்தது CIA..
அமெரிக்க அதிகாரிகளை தாக்கும் ஹவானா சிண்ட்ரோம் என்ற மர்மமான நோயின் பின்னால் எந்த வெளிநாட்டு சதியும் கிடையாது எனவும் எந்த அமெரிக்க அதிகாரிகளும் குறிவைக்கப்படவில்லை என மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தெரிவித்துள்ளது.
ஹவானா சிண்டரோம் என்பது மைக்ரோவேவ் கதிரியக்கத்தால் தாக்கப்படும் ஒருவித மர்மநோய் என கூறப்படுகிறது. இந்த ஹவானா சிண்டரோம் முதன்முதலில் கியூபா தலைநகர் ஹவானாவில் பதிவானது. இதனால் இந்த மர்ம நோய் ஹவானா சிண்ட்ரோம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
இந்த ஹவானா சிண்டரோமால் தாக்கப்படுபவர்களுக்கு ஒற்றை தலைவலி, குமட்டல், தலைசுற்றல், காதில் ரீங்கார ஒலி ஏற்பட்டு அதனால் கடுமையான காதுவலி, நினைவாற்றல் இழப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும், இதன் தாக்கம் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
முதன்முதலாக கியூபாவில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து வியன்னா, பெய்ஜிங், பாரிஸ் போன்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்த CIA இயக்குனர் பில் பர்ன்ஸ் தலைமையிலான குழுவில் ஓருவருக்கு ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வியட்நாம் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதர் ஒருவருக்கு ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்டது.
அப்போது சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு வியட்நாம் செல்லவிருந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பயணம் சில மணி நேரம் தாமதமானது. CIA இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் புதினை எச்சரித்ததால் இதன் பின்னால் ரஷ்யா இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் ரஷ்யா இதனை மறுத்துள்ளது.
இந்த நிலையில் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த CIA அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் ஹவானா சிண்ட்ரோம் தாக்குதலுக்கு எந்த வெளிநாட்டு சதியும் கிடையாது என கூறப்பட்டுள்ளது. அவை சுற்றுச்சூழல் காரணங்கள், மன அழுத்தம், தொழிற்நுட்ப காரணிகள் மற்றும் மருத்துவ காரணங்களால் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு ஹவானா சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வலி உண்மையானது, என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறிய CIA இயக்குனர், விசாரணை தொடரும் என கூறியுள்ளார். மேலும் இரண்டு டஜன் வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை என CIA கூறியுள்ளது.