1.8 லட்சம் கோடிக்கு மருந்து ஏற்றுமதி செய்து சாதனை படைத்த இந்தியா..?
நாட்டின் மருந்து ஏற்றுமதி 2021-22 ஆம் ஆண்டில் 1,83,422 கோடியை எட்டியுள்ளதாக வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-14 ஆம் ஆண்டில் இந்திய மருந்து ஏற்றுமதி 90,415 கோடியாக இருந்த நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டில் 1,83,422 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் உலக அளவில் வர்த்தக இடையூறுகள் மற்றும் கொரோனா தொற்று போன்ற கடினமான சூழ்நிலையில் இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.
இந்திய மருந்து நிறுவனங்கள் தங்கள் விலை, போட்டிதன்மை மற்றும் தரம் போன்றவற்றால் உலக அளவில் முத்திரை பதித்துள்ளன. உலகின் தடுப்பூசிகளில் 60 சதவீதம் மற்றும் பொதுவான மருந்துகளில் 20 சதவீதம் இந்தியாவில் இருந்து வருகின்றன.
Also Read: சீனாவின் சியோமி நிறுவனத்தின் 5,551 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..?
உலக அளவில் உற்பத்தி அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தையும், அதன் மதிப்பில் 14வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்திய மருந்து துறையின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் அதாவது 3.62 லட்சம் கோடி ஆகும். உலக அளவில் மருந்து ஏற்றுமதியில் 5.92 சதவீதத்தை கொண்டுள்ளது.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 73.31 சதவீதம் பங்குகளை ஃபார்முலேஷன்கள் மற்றும் உயிரியல்கள் கொண்டுள்ளன. அதனை தொடர்ந்து மொத்த மருந்துகள் (Bulk Drug) மற்றும் மருந்து இடைநிலைகள் (Drug Intermediates) உள்ளன. இந்தியாவின் முதல் 5 மருந்து ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, ரஷ்யா மற்றும் நைஜீரியா உள்ளன.
Also Read: அடுத்த ஆண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படும் என அறிவிப்பு..?
2020-21 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றின் போதும் இந்திய மருந்து நிறுவனங்கள் கூர்மையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 18 சதவீத வளர்ச்சியுடன் 24.4 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா உலகின் மருந்துகள் சேவை மையமாக உருவெடுத்து வருவதாக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.