85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்கியுள்ள இந்தியா..!
இந்தியா 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகளை இந்தியா வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“ஆத்மநிர்பர்தா இன் டிபென்ஸ்-கால் டு ஆக்ஷன்” என்ற மிகப்பெரிய பட்ஜெட் வலையரங்கில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா என்ற அரசாங்கத்தினுடைய ஊக்கத்தின் விளைவாக கடந்த 7 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையில் 350க்கும் மேற்பட்ட புதிய தொழிற்துறை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ஆத்ம நிர்பார் பாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் அதனை காணலாம். பாதுகாப்பு ஒதுக்கீட்டில் 70 சதவீதம் உள்நாட்டு தொழிலுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தடவாளங்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டு அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 பட்ஜெட் ஆனது, ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாடு முதல் உற்பத்தி வரை ஒரு துடிப்பான சுற்றுசூழலை உருவாக்குவதற்கான ஒரு வரைபடம் என பிரதமர் கூறினார்.
பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அதிமாக இருந்த நிலையில், அடுத்தடுத்த காலங்களில் அது குறைந்துவிட்டது. உள்நாட்டு கொள்முதலுக்காக சுமார் 50,000 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், 4.5 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள உபகரணங்கள் தொடர்பான கொள்முதல் செயல்முறை பல்வேறு கட்டங்களில் உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தடவாளங்களை வாங்குவதற்கான நடைமுறைகளை விளக்கிய பிரதமர் மோடி, ஆயுதங்களை வாங்குவதற்கும் பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்கும் இடையே உள்ள தாமதத்தை குறைப்பதற்கான ஒரே தீர்வு பாதுகாப்பு தயாரிப்பில் தன்னிறைவு அடைவது மட்டுமே என கூறினார்.
நாம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இறக்குமதி செய்யும் செயல்முறை நீண்டது. அவை நமது பாதுகாப்பு படைகளுக்கு அடையும் நேரத்தில் அவை காலாவதி ஆகிவிடுகின்றன. அதற்கான தீர்வு ஆத்மநிர்பார்பாரத் அபியான் மற்றும் மேக் இன் இந்தியாவில் உள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.